Movatterモバイル変換


[0]ホーム

URL:


உள்ளடக்கத்துக்குச் செல்
விக்கிப்பீடியா
தேடு

தமிழ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இக்கட்டுரை தமிழ் மொழி பற்றியது. ஏனைய பயன்பாடுகளுக்குத்தமிழ் (மாற்றுப் பயன்பாடுகள்) பக்கத்தைப் பாருங்கள்.
தமிழ்
உச்சரிப்புதமிழ்
நாடு(கள்)இந்தியா,இலங்கை,சிங்கப்பூர்,மலேசியா,இங்கிலாந்து,அமெரிக்கா,கனடா,நார்வே,ஆத்திரேலியா,பிரான்சு,செருமனி,தென்னாப்பிரிக்கா,இரீயூனியன்,மொரிசியசு,மியான்மர் (குறைவு)[1][2][3][4]
இனம்தமிழர்
தாய் மொழியாகப் பேசுபவர்கள்
70-80 மில்லியன்  (2007)[5]
8 மில்லியன் பேரின் 2வது மொழி[6]
திராவிடம்
தமிழ் அரிச்சுவடி (பிராமி)
அரவி (அப்சதிய்யா)
தமிழ் பிரெய்லி (பாரதி)
வட்டெழுத்து (வரலாறு)
கையெழுத்து வடிவம்
தமிழ் கையெழுத்து
அலுவலக நிலை
அரச அலுவல் மொழி
தமிழ்நாடு,[7]அந்தமான் நிக்கோபார் தீவுகள்,புதுச்சேரி[8]
 இலங்கை,[9]
 சிங்கப்பூர்.[10]
 ஆசியான்(செயல் மொழி)
அங்கீகரிக்கப்பட்ட சிறுபான்மை
மொழி
மொழிக் குறியீடுகள்
ISO 639-1ta
ISO 639-2tam
ISO 639-3Variously:
tam — தற்காலத் தமிழ்
oty — பழந்தமிழ்
ptq — பட்டப்பு மொழி
மொழிசார் பட்டியல்
oty பழந்தமிழ்
மொழிக் குறிப்புtami1289 (தற்காலத் தமிழ்)[11]
oldt1248 (பழந்தமிழ்)[12]
{{{mapalt}}}
இக் கட்டுரைஅனைத்துலக பலுக்கல் அரிச்சுவடியின் ஒலியியல் குறியீடுகளைக் கொண்டுள்ளது. முறையான அனைத்துலக பலுக்கல் அரிச்சுவடி உதவியற்று இருந்தால், நீங்கள் பெட்டி போன்ற குறியீடுகளைஒருங்குறிக்குப் பதிலாகக் காண நேரிடலாம்.
மெய்யெழுத்துகளில் ஒன்றானழகரம் தரும் ஒலி தமிழிலும்மலையாளத்திலும் மாண்டரீன், சீனம் உட்பட்ட சில மங்கோலிய மொழிகளிலும் மட்டுமே காணப்படுகிறது
இந்திய அரசியலமைப்பு
ரீதியாக அங்கீகரிக்கப்பட்ட
மொழிகள்
பற்றிய தொடரின் ஒரு பகுதி
பகுப்பு
இந்திய குடியரசின் 22
அதிகாரப்பூர்வ மொழிகள்
தொடர்புடையவை

தமிழ் (Tamil language),தமிழர்களினதும் தமிழ் பேசும் பலரின் தாய்மொழி ஆகும். தமிழ், உலகில் உள்ள முதன்மையான மொழிகளில் ஒன்றும்செம்மொழியும் ஆகும்.இந்தியா,இலங்கை,மலேசியா,சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் அதிக அளவிலும்,ஐக்கிய அரபு அமீரகம்,தென்னாப்பிரிக்கா,மொரிசியசு,பிசி,இரீயூனியன்,திரினிடாடு போன்ற நாடுகளில் சிறிய அளவிலும் தமிழ் பேசப்படுகிறது. 1997-ஆம் ஆண்டுப் புள்ளி விவரப்படி உலகம் முழுவதிலும் 8 கோடி (80மில்லியன்) மக்களால் பேசப்படும் தமிழ்,[13] ஒரு மொழியைத் தாய்மொழியாகக் கொண்டு பேசும் மக்களின் எண்ணிக்கை அடிப்படையில் பதினெட்டாவது இடத்தில் உள்ளது.[14] இணையத்தில் அதிகம் பயன்படுத்தப்படும்இந்திய மொழிகளில் தமிழ் முதன்மையாக உள்ளதாக 2017-ஆம் ஆண்டு நடைபெற்றகூகுள் கணக்கெடுப்பில் தெரிய வந்துள்ளது.[15]

இரண்டாயிரத்து ஐந்நூறு ஆண்டுகளுக்கும் மேல் பழமை வாய்ந்தஇலக்கிய மரபைக் கொண்டுள்ள தமிழ் மொழி, தற்போது வழக்கில் இருக்கும் ஒரு சிலசெம்மொழிகளில் இதுவும் ஒன்றாகும்.[16][17] மேலும் கவனமாகப் பழைய அமைப்புக்களைக் காக்கும் மரபினாலும் பழங்கால இலக்கிய நடை கூட மக்களால் புரிந்து கொள்ளும் நிலையில் உள்ளது. எடுத்துக்காட்டாக, பள்ளிக் குழந்தைகள் சிறுவயதில் கற்கும் அகர வரிசையானஆத்திசூடி 1,000 ஆண்டுகளுக்கு முன்னர் இயற்றப்பட்டது.திருக்குறள் ஏறத்தாழ 2,000 ஆண்டுகளுக்கு முன் இயற்றப்பட்டது.

வரலாறு

தமிழ் பிராமி எழுத்து, தென் இந்தியாவின் சாதவாகன பேரரசின் அரசர் 'வசிட்டி புத்திர சாதகர்ணி' -இன், இருமொழி நாணயத்தின் (160 AD) பின்புறத்தில் உள்ளது. முன் புறத்தில் அரசனின் முக உருவும், பிராகிருத மொழி பிராமி எழுத்திலும் உள்ளது.
தமிழர்

தமிழ்,இந்தியா உட்படஇலங்கை,சிங்கப்பூரில் பேசப்படும் மொழிகளில் ஒன்று. மிக நீண்ட இலக்கிய, இலக்கண மரபுகளைக் கொண்டது. தமிழ் இலக்கியங்களில் சில 2500 ஆண்டுகளுக்கு மேல் பழமையானவை. கண்டெடுக்கப்பட்டுள்ள தமிழ் ஆக்கங்கள் கிறித்துவுக்கு முன் 400-ஆம் ஆண்டைச் சேர்ந்தபிராமி எழுத்துகளில் எழுதப்பெற்றவைகளாகும்.[18] இந்தியாவில் கிடைத்துள்ள ஏறத்தாழ 1,00,000 (நூறாயிரம்) கல்வெட்டுகளில் தொல்லெழுத்துப் பதிவுகளில் 60,000 (அறுபதாயிரம்)-இற்கும் அதிகமானவை தமிழகத்தில் கிடைத்துள்ளன. இதில் ஏறத்தாழ 95 விழுக்காடு தமிழில் உள்ளன; மற்ற மொழிகள் அனைத்தும் ஐந்து விழுக்காட்டுக்கும் குறைவான கல்வெட்டுகளையே கொண்டுள்ளன.[19] பனையோலைகளில் எழுதப்பட்டு (திரும்பத் திரும்பப் படியெடுப்பதன் (பிரதி பண்ணுவது) மூலம்) வாய்மொழி மூலம் வழி வழியாகப் காக்கப்பட்டு வந்ததால், மிகப் பழைய ஆக்கங்களின் காலங்களைக் கணிப்பது மிகவும் கடினமாக உள்ளது. எனினும் மொழியியல் உட்சான்றுகள், மிகப்பழைய ஆக்கங்கள்பொ.ஊ.மு. 4-ஆம் நூற்றாண்டுக்கும்பொ.ஊ. 3-ஆம் நூற்றாண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில் இயற்றப்பட்டிருக்கலாம் எனக் காட்டுகின்றன. இன்று கிடைக்கக்கூடிய மிகப் பழைய ஆக்கம்தொல்காப்பியம் ஆகும். இது பண்டைக்காலத் தமிழின் இலக்கணத்தை விளக்கும் ஒரு நூலாகும். இதன் சில பகுதிகள் பொ.ஊ.மு. 400-ஆம் ஆண்டு காலத்தில் எழுதப்பட்டதாகக் கருதப்படுகின்றது. 2005-இல் அகழ்ந்தெடுக்கப்பட்ட சான்றுகள், தமிழ் எழுத்து மொழியைக் பொ.ஊ.மு. 600-ஆம் ஆண்டிற்கும் முன் தள்ளியுள்ளன.[20] பண்டைத் தமிழில் எழுதப்பட்ட குறிப்பிடத்தக்ககாப்பியம், பொ. ஊ. மு. 200 முதல் பொ.ஊ. 200 காலப்பகுதியைச் சேர்ந்தசிலப்பதிகாரம் ஆகும்.

தமிழறிஞர்களும்மொழியியலாளர்களும்தமிழ் இலக்கியத்தினதும் தமிழ் மொழியினதும் வரலாற்றை ஐந்து காலப்பகுதிகளாக வகைப்படுத்தியுள்ளனர். இவை:

பக்தி இலக்கிய காலத்திலும் மையக் காலத்திலும் பெருமளவு வடமொழிச் சொற்கள் தமிழில் கலந்துவிட்டன. பிற்காலத்தில்பரிதிமாற் கலைஞர்,மறைமலை அடிகள் முதலான தூய்மைவாதிகள் இவற்றைத் தமிழிலிருந்து நீக்க உழைத்தனர். இவ்வியக்கம்தனித்தமிழ் இயக்கம் என அழைக்கப்பட்டது. இதன் விளைவாக முறையான ஆவணங்களிலும் மேடைப் பேச்சுகளிலும் அறிவியல் எழுத்துகளிலும் வடமொழிக் கலப்பில்லாத் தமிழ், பயன்பட வழியேற்பட்டது. பொ.ஊ. 800-இற்கும் 1000-இற்கும் இடைப்பட்ட காலப்பகுதியில்,மலையாளம் ஒரு தனி மொழியாக உருவானதாக நம்பப்படுகின்றது.

மொழிக்குடும்பம்

தமிழ், திராவிட மொழிக் குடும்பத்தைச் சேர்ந்த ஒரு மொழியாகும். இக்குடும்பத்தில்,இருளா,கைக்காடி,பெட்டக் குறும்பா,சோலகா மற்றும்யெருகுலா என்னும் மொழிகளும் அடங்கும்.தமிழ் மொழிக் குடும்பம்:

  • தமிழ்-மலையாளம் மொழிகள்: தமிழ் – மலையாளம் மொழிகளின் ஒரு துணைக் குடும்பமாகும்.
  • தமிழ்-குடகு மொழிகள்: தமிழ் – குடகு மொழிக் குடும்பத்தின் துணைப் பிரிவாகவும்.
  • தமிழ்-கன்னடம் மொழிகள்: தமிழ் – கன்னடம் மொழிக் குடும்பத்தின் துணைப் பிரிவாகவும் உள்ளன.
  • திராவிட மொழிக் குடும்பம்: திராவிட மொழிக் குடும்பத்தின் துணைப் பிரிவுகளுள் ஒன்றானதென் திராவிட மொழிக் குடும்பத்தின் உட் பிரிவுகளுள் ஒன்றாகும்.

தமிழ் நாட்டை எல்லையாகக் கொண்டுள்ள, கேரள மாநில மக்களால் பேசப்படும்மலையாளம், சொற்கள், உரையாடல் அமைப்பு ஆகியக்கூறுகளில் தமிழை நெருக்கமாக ஒத்துள்ள ஒரு மொழியாகும். ஏறத்தாழ ஒன்பதாம் நூற்றாண்டுவரை தமிழும், மலையாளமும் ஒரே மொழியின் இரு வட்டார வழக்குகளாகவே இருந்து வந்தன. இரு பகுதியினருமே இம்மொழியினைத் தமிழ் எனவே வழங்கி வந்துள்ளனர். மலையாளத்துக்கும் தமிழுக்கும் இடையிலான வேறுபாடுகள் சில, வரலாற்றுக்கு முந்திய காலம் தொட்டே கிழக்குத் தமிழ் வழக்கிற்கும் மேற்குத் தமிழ் வழக்கிற்குமிடையே பிரிவு ஏற்படத் தொடங்கியதைக் காட்டுவதாக அமைகின்ற போதும், தெளிவாக இரண்டு தனி மொழிகளாகப் பிரிந்தது 13-ஆம் மற்றும் 14-ஆம் நூற்றாண்டுக் காலப் பகுதியிலேயே ஆகும்.[21]

தமிழ் என்னும் சொல்

இதனையும் பார்க்க:தமிழ் (சொல்) மற்றும்தமிழ் (சொல்லாட்சி)

சொற்பிறப்பு

சம்பை தமிழ் பிராமி கல்வெட்டு. விழுப்புரம் மாவட்டத்தில் திருக்கோவிலூருக்கு அருகே உள்ளது. இது தமிழ்ச் சங்க காலத்தைச் (400 BCE) சேர்ந்தது.

சௌத்துவருத்து என்பவர் தமிழ் என்பதன் ஆறுதம்-மிழ் என்று பிரித்துக் காட்டி "தனது மொழி" என்றுபொருள்படும் என்று தெரிவிக்கிறார்.[22]காமெல் சுவெலிபில் என்றசெக்குமொழியியலாளர்,தம்-இழ் என்பது "தன்னிலிருந்து மலர்ந்து வரும் ஒலி" என்ற பொருள் தரவல்லது என்கிறார். மாறாக,tamiz <tam-iz <*tav-iz <*tak-iz என்ற கிளவியாக்கம் நடந்திருக்கலாமென்றும், அதனால் இது "சரியான (தகுந்த) (பேச்சு) முறை" என்ற பொருளிலிலிருந்து தொடங்கியிருக்கலாம் என்றும் கூறியிருக்கிறார்.[23]

தமிழ் பேசப்படும் இடங்கள்

மாங்குளம் தமிழ் பிராமி கல்வெட்டு, தமிழ்ச் சங்க காலத்தைச் (400 BCE- 200 CE) சேர்ந்தது.
மாங்குளம் தமிழ் பிராமி கல்வெட்டு, தமிழ்ச் சங்க காலத்தைச் (400 BCE- 200 CE) சேர்ந்தது, அதன் விளக்கம்.

தமிழ், தென் இந்திய மாநிலமான தமிழ் நாட்டின் பெரும்பான்மையினரதும் இலங்கையின் வடக்குக் கிழக்குப் பகுதிகளில் வாழும் மக்களதும் முதன் மொழியாகும். தமிழ், மேற்படி நாடுகளின் பிற பகுதிகளிலும் குறிப்பாக, இந்திய மாநிலங்களானகர்நாடகம்,கேரளம்,ஆந்திரப் பிரதேசம் மற்றும்மகாராட்டிரத்திலும், இலங்கையில்கொழும்பிலும் மத்தியமலை நாட்டுப் பகுதிகளிலும்முசுலிம்கள் வாழும் பகுதிகளிலும் வழங்கி வருகின்றது

தமிழ் மக்கள், 19-ஆம் நூற்றாண்டிலும் 20-ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்திலும் ஒப்பந்தக் கூலிகளாகவும் கீழ்நிலை அரசப் பணியாளர்களாகவும் இந்தியா, இலங்கை போன்ற நாடுகளிலிருந்து பிரித்தானியப் பேரரசின் பல பகுதிகளுக்கும் அனுப்பப்பட்டனர். அவ்வாறு, அவர்கள் சென்ற இடங்களில் தமிழ் பேசும் சமுதாயங்கள் உருவாகின. இவர்களின் வழிவந்தவர்கள் இன்றுசிங்கப்பூர்,மலேசியா,மொரீசியசு போன்ற நாடுகளில் குறிப்பிடத்தக்க குடித்தொகை கொண்டவர்களாக வாழ்ந்து வருகின்றார்கள்.தென்னாப்பிரிக்கா,கயானா,பிசி,சுரினாம்,திரினிடாடு, உடொபாகோ போன்ற நாடுகளிலும் பலர் பூர்வீகத் தமிழராக இருந்தும், அந்நாடுகளில் அவர்கள் தமிழ் மொழியைப் பேசுவதில்லை.

மிக அண்மைக்காலங்களில், பெரும்பாலும் இலங்கையின் இன முரண்பாடுகள் காரணமாக அகதிகளாக அங்கிருந்து இடம் பெயர்ந்தவர்களும் ஓரளவு பொருளாதாரக் காரணங்களுக்காக இடம் பெயர்ந்தவர்களுமாகப் பல தமிழர்கள்ஆத்திரேலியாவிலும்கனடாவிலும்ஐக்கிய அமெரிக்காவிலும் பெரும்பாலானஐரோப்பிய நாடுகளிலும் வாழ்ந்து வருகின்றார்கள். தற்போது இவர்களில் பழைய தலைமுறையைச் சேர்ந்தவர்கள் தமிழ் மொழியை ஓர் உயிர்ப்புள்ள மொழியாக வழங்கி வந்தபோதிலும் இளைய தலைமுறையினர் பலர் தமிழ் மொழியைப் பயன்படுத்த இயலாதவர்களாகவும் ஆர்வமற்றவர்களாகவும் வளர்ந்து வருவதைக் கவனிக்க முடிகின்றது.

ஆட்சி மொழி அங்கீகாரம்

தமிழ்இந்திய மாநிலங்களில் ஒன்றானதமிழ்நாட்டின் ஆட்சி மொழியாகும். அத்துடன்இந்திய அரசியலமைப்பின்,எட்டாவது பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ள 22 தேசிய மொழிகளுள் ஒன்றாகவும் உள்ளது.இலங்கையில் மூன்று ஆட்சி மொழிகளுள் தமிழும் ஒன்று. இந்தியாவில்தமிழ்நாடு மாநிலத்திலும்புதுச்சேரிஒன்றியப் பகுதியிலும் தமிழ் அரச அலுவல் மொழியாக இருக்கிறது.சிங்கப்பூரிலும் நான்கு ஆட்சி மொழிகளுள் தமிழும் ஒன்று.தென்னாப்பிரிக்காவிலும் தமிழுக்கு அரசியலமைப்பு அங்கீகாரம் உள்ளது. மலேசியாவிலும் முதல் நான்கு ஆட்சி மொழிகளில் தமிழும் இடம்பெற்றுள்ளது. மலேசியாவில் தொடக்க இடைநிலைப்பள்ளிகளில் தமிழ் கற்பிக்கப்படுகிறது. நாடு முழுவதும் 523தமிழ்த் தொடக்கப்பள்ளிகள் அரசுப் பள்ளிகளாக இயங்குகின்றன.

இந்தியாவில் செம்மொழி அங்கீகாரம்

இந்தியாவிலும் வெளி நாடுகளிலும் உள்ள பல தமிழ் அமைப்புகளினதும் அறிஞர்களினதும் நீண்ட கால முயற்சிகளைத் தொடர்ந்து[24] இந்திய அரசினால் தமிழ் ஒரு செம்மொழியாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அங்கீகாரம் பெற்றுள்ள முதல் இந்திய மொழி தமிழாகும். இந்திய நாடாளுமன்றத்தின் இரு அவைகளினதும் கூட்டுக் கூட்டமொன்றின்போது, 2004 சூன் 6 ஆம் நாள் அப்போதைய இந்திய குடியரசுத்தலைவர்அப்துல் கலாம் இதனை அறிவித்தார்.[25] குடியரசுத் தலைவரின் பேச்சின்-கூற்று 41 யும், இந்திய அமைச்சரவையின் முறையான அங்கீகாரம்] தொடர்பானபிபிசி செய்தியையும் காண்க.[26] தமிழ் செம்மொழியாக அறிவித்த அரசாணையைஅக்டோபர் 122004 இல் இந்திய அரசு வெளியிட்டது.[27][28]

பேச்சுத்தமிழ் – உரைநடைத்தமிழ் வேறுபாடுகள்


தமிழ்
கொடுந்தமிழ்
செந்தமிழ்
தனித்தமிழ்
நற்றமிழ்
முத்தமிழ்
துறை வாரியாகத் தமிழ்
அறிவியல் தமிழ்
ஆட்சித் தமிழ்
இசைத்தமிழ்
இயற்றமிழ்/இயல்தமிழ்
சட்டத் தமிழ்
செம்மொழித் தமிழ்
தமிழிசை
நாடகத் தமிழ்
மருத்துவத் தமிழ்
வட்டார வழக்குகள்
மீனவர் தமிழ்
முசுலிம் தமிழ்
பிராமணத் தமிழ்
ஐயங்கார் தமிழ்
திருநெல்வேலித் தமிழ்
ஆதிதிராவிடர் பேச்சு தமிழ்
குமரி மாவட்டத் தமிழ்
கொங்குத் தமிழ்
செட்டிநாட்டுத் தமிழ்
சென்னைத் தமிழ்
மட்டக்களப்புப் பேச்சுத் தமிழ்
நாஞ்சில் தமிழ்
மணிப்பிரவாளம்
மலேசியத் தமிழ்
யாழ்ப்பாணத்துப் பேச்சுத் தமிழ்
நீர்கொழும்பு பேச்சுத் தமிழ்
ஜுனூன் தமிழ்
மலையகத் தமிழ்
சங்கேதி மொழி
பாலக்காடு தமிழ்
பெங்களூர் தமிழ்

தொகு
முதன்மைக் கட்டுரை:பேச்சுத் தமிழ்
தமிழில் பெயர்க்கப்பட்டு, 1715-இல்தரங்கம்பாடியில் அச்சிடப்பட்டவிவிலியத்தின் முதல் நூலாகியதொடக்க நூலின் முதல் பக்கம்,உலகத் தமிழாராய்ச்சி மாநாடு (1968) விழா மலரில்.
தமிழில் பெயர்க்கப்பட்டு 1723-இல்தரங்கம்பாடியில் அச்சிடப்பட்டவிவிலியத்தின் முதல் நூலாகியதொடக்க நூலின் முதல் அதிகாரம்.

தமிழ், அதன் பல் வேறுபட்ட வட்டார வழக்குகளுக்கு மேலதிகமாக, இலக்கியங்களில் பயன்படும் முறையானசெந்தமிழ்,கொடுந்தமிழ் என வழங்கப்படும் பேச்சுத் தமிழுக்கும் இடையே தெளிவான இருவடிவத் தன்மை (diglossia) காணப்படுகின்றது. இங்கேகொடுந்தமிழ் என்பது அனைத்து வட்டாரப் பேச்சுத் தமிழ் வழக்குகளையும் பொதுவாகக் குறிக்கும் ஒரு சொற் பயன்பாடு ஆகும். இந்த இருவடிவத் தன்மை பண்டைக் காலம் முதலே தமிழில் இருந்து வருவதைக் கோவில் கல்வெட்டுகளிற் காணப்படும் தமிழ், சமகால இலக்கியத் தமிழினின்றும் குறிப்பிடத்தக்க அளவு வேறுபட்டுக் காணப்படுவதினின்றும் அறிந்துகொள்ள முடியும். இவ்வாறு, செந்தமிழ், எந்த வட்டார மொழி வழக்கையும் சாராது இருப்பதனால் எழுத்துத் தமிழ், தமிழ் வழங்கும் பல்வேறு பகுதிகளிலும் ஒன்றாகவே இருப்பதைக் காணலாம்.

தற்காலத்தில் எழுதுவதற்கும் மேடைப் பேச்சுக்கும் செந்தமிழே பொதுவாகப் பயன்படுத்தப்படுகின்றது. எடுத்துக்காட்டாகச் செந்தமிழ், பாட நூல்களுக்குரிய மொழியாகவும் பெருமளவுக்கு இலக்கிய மொழியாகவும் மேடைப் பேச்சுகளுக்கும், விவாதங்களுக்கும் உரிய மொழியாகவும் விளங்கிவருகிறது. அண்மைக் காலங்களில், மரபு வழியில், செந்தமிழுக்குரிய துறைகளாக இருந்து வந்த பகுதிகளிலும் கொடுந்தமிழ்ப் பயன்பாடு அதிகரித்து வருவதைக் காணமுடிகின்றது. பெரும்பாலான தற்காலத்திரைப்படங்கள், மேடை நாடகம் மற்றும் தொலைக் காட்சி, வானொலி முதலியவற்றில் இடம்பெறும் மக்களுக்கான பொழுதுபோக்கு அம்சங்கள் பலவற்றிலும் கொடுந்தமிழ் பயன்படுத்தப்படுவதைக் காணலாம். பல அரசியல்வாதிகளும் மக்களுக்கு நெருக்கமாகத் தங்களைக் காட்டிக் கொள்ளும் நோக்கில் தங்கள் மேடைப் பேச்சுக்களிலும் கொடுந்தமிழைப் பயன்படுத்தி வருகின்றனர்.

பல ஐரோப்பிய மொழிகளில் காணப்படுவதற்கு மாறாக, தமிழில், அதன் வரலாற்றின் பெரும் பகுதியிலும், ஒரு பொதுவான பேச்சுமொழி இருந்ததில்லை. தற்காலத்தில் அதிகரித்த கொடுந்தமிழ்ப் பயன்பாடு, அதிகாரபூர்வமற்ற முறையில் பொதுப் பேச்சுத் தமிழ் வழக்குகள் தோன்றுவதற்குக் காரணமாகவுள்ளது.இந்தியாவில் பொதுக் கொடுந்தமிழ், "படித்த, பிராமணரல்லாதவர்'களின் பேச்சுவழக்கை அடிப்படையாகக் கொண்டுள்ளது" (Schiffman,1998). எனினும் குறிப்பிடத்தக்க அளவுக்குத்தஞ்சாவூர் மற்றும்மதுரைப் பேச்சு வழக்குகளில் செல்வாக்கு உள்ளது. இலங்கையில், அதிக மக்கள் தொகையைக் கொண்டயாழ்ப்பாணப் பேச்சு வழக்கையே பெரும்பாலான வெளியார்இலங்கைத் தமிழ்ப் பேச்சு வழக்காக இனங்கண்டு கொள்கின்றனர். இருப்பினும் இலங்கையின் கிழக்குப்பகுதியில் குறிப்பாகமட்டக்களப்புப் பேச்சுத் தமிழ் யாழ்ப்பாணப் பேச்சு வழக்கிலிருந்து வேறுபட்டு வடமொழிக்கலப்புக் குறைந்து மிகப்பழைய விளிப்புப் பெயர்களையும் அசைச்சொற்களையும் கொண்டு காணப்படுகிறது.[29]

வட்டார மொழி வழக்குகள்

முதன்மைக் கட்டுரை:தமிழ் வட்டார மொழி வழக்குகள்
இலக்கிய தமிழில், (அம்சத்துவனியில்) விநாயகப் பெருமானைத் துதித்து பாடல்.




இக்கோப்புகளைக் கேட்பதில் பிரச்சினையா?ஊடக உதவியைப் பார்க்கவும்.

தமிழில் வட்டாரமொழி வழக்குகள், பெரும்பாலும் சொற்களை ஒலிப்பதில் மாறுபடுகின்றன. மற்றும் பல வேறு பழைய செந்தமிழ்ச் சொற்களினின்றும் பிறந்தவையாகும். எடுத்துக்காட்டாக, "இங்கே" என்ற சொல்கன்னியாகுமரி மாவட்டத்தில் பரவலாக "இஞ்ச" என்றும்தஞ்சாவூர் பகுதிகளில் "இங்க" என்றும்யாழ்ப்பாணம் (இலங்கை) பகுதிகளில் "இங்கை" என்றும் வழங்கப்படுகின்றது. ஆயினும்திருநெல்வேலி பகுதிகளில் "இங்கனெ" என்றும்இராமநாதபுரம் பகுதிகளில் "இங்குட்டு" / "இங்கிட்டு" என்றும் வழங்கும் சொற்கள் "இங்கே" என்ற சொல்லில் கிளைத்தவை அல்லாமல் வேறு செந்தமிழ்ச் சொற்களினின்றும் பிறந்தவையாகும். இங்கனெ என்பது "இங்கணே"/"இங்கனே" என்பதன் மாற்றமும் "இங்குட்டு"/"இங்கிட்டு" என்பது "இங்கட்டு" என்னும் செம்மொழிச்சொல்லின் மாற்றமும் ஆகும். "கண்" என்னும் சொல்லின் பொருள் இடம் ஆகும். சான்றாகச் சென்னைத் தமிழகராதி: "Place,site; இடம். ஈர்ங்கண்மா ஞாலம் (குறள், 1058)". கட்டு என்னும் சொல்லும் கண் என்பதோடு து-விகுதி சேர்ந்து வழங்கும் சொல்லாகும். கொங்குநாட்டார் இன்றும் "அக்கட்டாலே போய் உட்கார்" என்று சொல்வதைக் கேட்கலாம். "இங்கன்" அல்லது "ஈங்கன்" என்பதும் பழைய இலக்கியங்களில் காண்பவை (சென்னைப் பல்கலைக் கழகத் தமிழகராதி காண்க). இஃது ஒரே சொல் பலவாறு சிதைந்ததாகக் கருதும் கோட்பாட்டைத் திருத்த உதவும்; மேலும் வட்டாரவழக்குகள் பழைய இலக்கியச்சொற்கள் உண்மையிலேயே பேச்சில் வழங்குவதற்கு நல்ல சான்றாகவும் இருப்பதைக் காட்டும்.

பெரும்பாலான வட்டார மொழி வழக்குகளின் சொல் அகராதியில் குறிப்பிடத்தக்க மாற்றம் இல்லை என்றாலும், சில வழக்குகள் பெரிதும் மாறுபடுகின்றன. இலங்கையில் பேசப்படும் தமிழின் சில சொற்கள், தமிழகத்தில் அன்றாட வழக்கில் பயன்படுத்தப் படுவதில்லை. "பாலக்காட்டு ஐயர்" தமிழில் பல மலையாள சொற்கள் கலந்திருக்கும். சில இடங்களில் மலையாள வாக்கிய அமைப்பும் காணப்படும். இறுதியாக, எப்பார் மற்றும் மாண்டியம் வட்டாரங்களில் பதினோறாம் நூற்றாண்டில் புலம் பெயர்ந்த வைணவ கோட்பாட்டைப் பின்பற்றும் ஐயங்கார் தமிழர்களால் பேசப்படும் தமிழில்வைணவ பரிபாசையின் எச்சம் காணப்படுகிறது.

தமிழ் மொழி வழக்குகள் வட்டார அடிப்படையில் மட்டுமல்லாதுசாதி அடிப்படையிலும் வேறுபடும். பல சாதிகளுக்கெனத் தனியான பேச்சு வழக்குகள் இருந்து வந்தன. தற்போது சாதி மறுப்பு இயக்கங்களின் விளைவாக இவ்வேறுபாடுகள் மறைந்து வந்தாலும், ஒருவரின் பேச்சு வழக்கை வைத்து அவரின் சாதியைச் சில வேளைகளில் கணிக்க முடிகிறது.

எத்னொலோக் (Ethnologue) என்ற மொழிகள்பற்றிய பதிப்பு நிறுவனம், தமிழில் 22 வட்டார வழக்குகள் இருப்பதாகத் தெரிவிக்கிறது. அவையாவனஆதி திராவிடர்,ஐயர், ஐயங்கார், அரவா, பருகண்டி, கசுவா, கொங்கர், கொரவா, கொர்சி, மதராசி, பரிகலா, பாட்டு பாடை,இலங்கை தமிழ்,மலேயா தமிழ்,மியான்மர் தமிழ், தென்னாப்பிரிக்க தமிழ், திகளு, அரிசன், சங்கேதி, எப்பார்,மதுரை,திருநெல்வேலி.கொங்கு மற்றும்குமரி ஆவன வேறு சில தெரிந்த வட்டார வழக்குகள்.

புவியியல் தொடர்பான வட்டார வழக்குகள் ஒருபுறமிருக்க, சமுதாய அடைப்படையிலும் பல்வேறு மட்டங்களில் தமிழ் மொழிப் பயன்பாட்டில் வேறுபாடுகளைக் கவனிக்கலாம். புதிய வழக்காக, தொலைக்காட்சி முதலான தொடர்புச் சாதனங்களும் இன்று பெருமளவுக்கு ஆங்கிலம் கலந்த தமிழைத் தமிழ் மக்கள் மத்தியில் புழக்கத்துக்கு விட்டுள்ளன. மேனாட்டுக் கல்வி மற்றும் அறிவியல் வளர்ச்சி தொடர்பில் புதிய சொல்லாக்கம், கலைச்சொல்லாக்கம் முதலிய அம்சங்களில் ஒருங்கிணைவு அற்ற முயற்சிகள் வேறுபட்ட மொழி வழக்குகளை உருவாக்கியுள்ளன. முக்கியமாக, இலக்கியம் மற்றும் அது போன்ற பண்பாட்டு மற்றும் மரபுவழிப் பயன்பாடுகளுக்கு அப்பால், கல்வி, அறிவியல், நிருவாகம் மற்றும் இன்னோரன்ன நவீனத் துறைகளிலும் தமிழைப் பயன்படுத்திவரும் தமிழ்நாடு, இலங்கை போன்ற நாடுகளில் உருவாக்கப்படும் ஆயிரக்கணக்கான தமிழ்ச் சொற்கள், ஒரு பகுதியினர் பயன்படுத்தும் தமிழை இன்னொரு பகுதித் தமிழர் புரிந்து கொள்ளமுடியாத அளவுக்கு வேறுபாடுள்ள மொழி வழக்குகள் உருவாகக் காரணமாக உள்ளன.

எழுத்துமுறை

எழுத்துரு மாற்ற வரலாறு
திருக்குறள்ஓலைச் சுவடி.

தமிழ்எழுத்து முறைமை ஒலிப்பியல் அடிப்படையிலானது; குறுக்கம், அளபெடை, மற்றும் புணர்ச்சி நெறிகளுக்கு உட்பட்டே எழுத்துகள் ஒலிக்கப்படுகின்றன. தற்போதைய தமிழ், எழுத்துமுறைதமிழ் பிராமியிலிருந்து தோன்றியது ஆகும். தமிழ் பிராமி காலப்போக்கில் வட்டெழுத்தாக உருமாறியது. ஆறாம் நூற்றாண்டிலிருந்து பத்தாம் நூற்றாண்டு வரையிலான காலத்தில் "வட்டெழுத்து" முறை உருவானது. ஓலைச்சுவடிகளிலும் கல்லிலும் செதுக்குவதற்கேற்ப இருந்தது.

வட்டெழுத்தில் சமசுகிருத ஒலிகள் குறிக்கப்பட முடியாது என்பதால் சமசுகிருத ஒலிகளை எழுதும் பொருட்டு சில கிரந்த எழுத்துமுறை கிரந்த எழுத்துகளைப் பயன்படுத்தினர். இவ்வெழுத்துகளைப் பயன்படுத்துவதற்கு மாறாகத் தொல்காப்பியம் கூறியபடி அச்சொற்களைத் தமிழ்படுத்த வேண்டும் என்றும் ஒரு கருத்து நிலவுகிறது.

பின்னர்,வீரமாமுனிவரின் அறிவுரைப்படி இரட்டைக் கொம்பு போன்ற மாற்றங்கள் செய்யப்பட்டன. 1977-ஆம் ஆண்டும. கோ. இராமச்சந்திரன் ஆட்சியில் அச்சில் ஏற்றுவதை எளிமைப்படுத்தும் வகையில்ஈ. வெ. இராமசாமியால் பரிந்துரைக்கப்பட்ட ஆகார மற்றும் ஐகார உயிர்மெய் எழுத்துகளில் சீர்திருத்தம் செய்யப்பட்டது. எனினும்ஈ. வெ. இராமசாமி – அதில், உகர சீர்திருத்தம் செயல்படுத்தப்படவில்லை.

தமிழ் எழுத்துகள்

முதன்மைக் கட்டுரை:தமிழ் எழுத்து முறை
தமிழ் அரிச்சுவடி
உயிரெழுத்துக்கள்→
மெய்யெழுத்துக்கள்
க்காகிகீகுகூகெகேகைகொகோகௌ
ங்ஙாஙிஙீஙுஙூஙெஙேஙைஙொஙோஙௌ
ச்சாசிசீசுசூசெசேசைசொசோசௌ
ஞ்ஞாஞிஞீஞுஞூஞெஞேஞைஞொஞோஞௌ
ட்டாடிடீடுடூடெடேடைடொடோடௌ
ண்ணாணிணீணுணூணெணேணைணொணோணௌ
த்தாதிதீதுதூதெதேதைதொதோதௌ
ந்நாநிநீநுநூநெநேநைநொநோநௌ
ப்பாபிபீபுபூபெபேபைபொபோபௌ
ம்மாமிமீமுமூமெமேமைமொமோமௌ
ய்யாயியீயுயூயெயேயையொயோயௌ
ர்ராரிரீருரூரெரேரைரொரோரௌ
ல்லாலிலீலுலூலெலேலைலொலோலௌ
வ்வாவிவீவுவூவெவேவைவொவோவௌ
ழ்ழாழிழீழுழூழெழேழைழொழோழௌ
ள்ளாளிளீளுளூளெளேளைளொளோளௌ
ற்றாறிறீறுறூறெறேறைறொறோறௌ
ன்னானினீனுனூனெனேனைனொனோனௌ

கிரந்த எழுத்துகள்

முதன்மைக் கட்டுரை:கிரந்த எழுத்துமுறை

கிரந்த எழுத்துகள் தென்னிந்தியாவில், குறிப்பாகத் தமிழ் நாட்டில்சமசுகிருத மொழியை எழுதப் பயன்பட்ட வரி வடிவங்களாகும். இருபதாம் நூற்றாண்டில்தேவநாகரி எழுத்துகள் பிரபலமடைந்ததாலும் தமிழ்நாட்டில்திராவிட இயக்கம் சமற்கிருதம் மீது பொதுவாகச் செய்த தாக்கத்தாலும் கிரந்த எழுத்துகளின் பயன்பாடு பெருமளவு குறைந்து விட்டது. தமிழில் மணிப்பிரவாள எழுத்து நடை செல்வாக்கு செலுத்தியபொழுது கிரந்த எழுத்துகள் பரவலாகப் பயன்படுத்தப்பட்டது. இன்று,மணிப்பிரவாள எழுத்து நடை மறைந்தாலும், "ஜ", "ஷ", "ஸ", "ஹ","க்ஷ" போன்ற கிரந்த எழுத்துகள் ஆங்கிலச் சொற்களையும் அறிவியல் சொற்களையும் வடமொழிச் சொற்களையும் பிறமொழிச் சொற்களையும் குறிக்க பிழையாகப் பயன்படுத்தப்படுகின்றன.

வார்ப்புரு:தமிழ் கிரந்த எழுத்துகள்

தமிழ் ஒலிப்புமுறை

நா நெகிழ் பயிற்சி வாக்கியங்கள்.




இக்கோப்புகளைக் கேட்பதில் பிரச்சினையா?ஊடக உதவியைப் பார்க்கவும்.
கோவிலில்) உள்ள தமிழ் கல்வெட்டு. இதுவட்டெழுத்தில் உள்ளது. இதுசோழப் பேரரசின் காலத்தில் 1000 CE – இல் கட்டப்பட்டது.

முதன்மைக் கட்டுரை:தமிழ் ஒலிப்புமுறை

தமிழில் 12 உயிரெழுத்துகளும், 18 மெய்யெழுத்துகளும் உள்ளன. ஒவ்வொரு உயிரெழுத்தும் 18 மெய்யெழுத்துகளோடும் சேர்வதால் 216 உயிர்மெய்யெழுத்துகள் பிறக்கின்றன. இவற்றோடு ஆய்த எழுத்தும் சேர்த்து தமிழ் எழுத்துகள் மொத்தம் 247 (உயிரெழுத்துகள் – 12, மெய்யெழுத்துகள் – 18, உயிர்மெய்யெழுத்துகள் – 216, ஆய்த எழுத்து – 1) ஆகும்.

உயிர் எழுத்துகள்

உயிரெழுத்துகளில் குறுகிய ஓசையுடைய எழுத்துகளான அ, இ, உ, எ, ஒ ஆகிய எழுத்துகள் குற்றெழுத்துகள் (குறில்) எனவும், நீண்ட ஓசையுடைய எழுத்துகளான ஆ, ஈ, ஊ, ஏ, ஐ, ஓ, ஔ ஆகிய எழுத்துகள் நெட்டெழுத்துகள் (நெடில்) எனவும் வழங்கப்படும்.

குறிலெழுத்துகள் ஒவ்வொன்றையும் ஒருமாத்திரை நேரத்திலும் நெட்டெழுத்துகள் ஒவ்வொன்றையும் இரண்டு மாத்திரை நேரத்திலும் ஒலிக்க வேண்டும்.

குறில்நெடில்
முன்நடுபின்முன்நடுபின்
மேல்iu
இடைeo
கீழ்a(ai)(aw)

மெய் எழுத்துகள்

மெய்யெழுத்துகளில் வன்மையான ஓசையுடைய எழுத்துகள் வல்லினம் என்றும், மென்மையான ஓசையுடைய எழுத்துகள் மெல்லினம் என்றும், இவை இரண்டிற்கும் இடைப்பட்ட ஓசையுடைய எழுத்துகள் இடையினம் என்றும் வழங்கப்படும்.

  • வல்லினம்: க் ச் ட் த் ப் ற்
  • மெல்லினம்: ங் ஞ் ண் ந் ம் ன்
  • இடையினம்: ய் ர் ல் வ் ழ் ள்

மெய்யெழுத்துகள் ஒவ்வொன்றும் அரைமாத்திரை நேரத்தில் ஒலிக்கப்படும்

கீழேயுள்ள அட்டவணையில் தமிழ் மெய்யெழுத்துகள், அனைத்துலக ஒலிப்பெழுத்துகளுடனும், ஒலிப்பு வகைகளுடனும் தரப்பட்டுள்ளன.

இதழ்பல்நுனியண்ணம்வளைநாஇடையண்ணம்கடையண்ணம்
வெடிப்புp(b)(d̪)ʈ(ɖ)(dʒ)k(g)
மூக்குmɳɲŋ
உருட்டுɾ̪r
மருங்குɭ
உயிர்ப்போலிʋɻj

சிறப்பு எழுத்து –ஆய்த எழுத்து

ஆய்த எழுத்து

ஃ – மூன்று புள்ளிகளாக எழுத்தப்படும் ஆய்த எழுத்திற்கு அஃகேனம், தனிநிலை, புள்ளி, ஒற்று என்னும் வேறு பெயர்களும் உண்டு. இவ்வெழுத்தானது தனக்கு முன்னர் ஒரு குறில் எழுத்தையும் பின்னர் ஒரு வல்லின உயிர்மெய் எழுத்தையும் பெற்றே உச்சரிக்கப்படும்.எடுத்துக்காட்டு.

  • அஃது – "அ" குறில் "து" – வல்லின உயிர்மெய்
  • எஃகு – "எ" குறில் "கு" – வல்லின உயிர்மெய்
  • அஃது உரிமையுடையது – அடுத்த சொல்லின் முதலெழுத்து "உ" உயிரெழுத்து

பழந்தமிழில் பரவலாக ஆய்த எழுத்து பயன்படுத்தப்பட்டாலும் தற்காலத்தில் ஆய்த எழுத்தின் பயன்பாடு அரிதே. சில நேரங்களில் பகரத்துடன் சேர்த்து (ஃப) ஆங்கில எழுத்தான f-ஐக் குறிக்கப் பயன்படுத்தப்படுகின்றது. ஆய்த எழுத்து ஒரு சார்பெழுத்தாகும்.தொல்காப்பியத்தின்படி சார்பெழுத்து மொழிக்கு முதலிலும், இறுதியிலும், தனித்தும் வராது.

ஒலிப்பியல்

தொடர்புடைய கட்டுரைகள்:தமிழ் வட்டார மொழி வழக்குகள்

பெரும்பாலானஇந்திய மொழிகளைப் போலன்றி தமிழில் மூச்சைக்கொண்டு ஒலிக்கும் (aspirated) மெய்யெழுத்துகள் கிடையாது. பேச்சில் வழங்கிவரினும் தமிழ் எழுத்து மிடற்றொலிகளையும் (voiced sounds) பிற ஒலிகளையும் வேறுபடுத்துவதில்லை. மிடற்றொலிகளும் அவற்றின் இனமான பிற ஒலிகளும் தமிழில் வகையொலிகள் (allophones) அல்ல.தமிழர் பொதுவாக இவ்வேறுபாட்டை உணர்ந்திருக்கின்றனர். மேலும்,தொல்காப்பியத்தில் ஓர் எழுத்தை எப்பொழுதுமிடற்றிலிருந்து ஒலிக்க வேண்டும் என்பது பற்றிய வரைமுறை விளக்கப்பட்டுள்ளது. எடுத்துக்காட்டாக, "க" எனும் மெய்யொலி மிடறு நீங்கிய நிலையில் (voiceless) "k" ஒலியுடன் சொல்லின் முதலில் வரும்பொழுதும் (உ: கல்), பிற இடங்களில் ஒற்றிரட்டித்து (geminate) வரும்பொழுதும் (உ: அக்கா), அமைகிறது. "க" என்பது மிடற்றொலியாக (voiced) "g" ஒலியுடன், தொல்காப்பிய விதிப்படி சொல்லின் முதலில் வராது, சொல்லின் உள்ளே வரும்: (உ: பூங்கா) தன் இன மூக்கொலியை (nasal) அடுத்து வரும்.

சொல்லின் முதலில்சகரம் எவ்வாறு ஒலிக்கப்பட வேண்டும் என்ற நெறியைத் தவிர பிற நெறிமுறைகள் செந்தமிழில் பொதுவாகப் பின்பற்றப்படுகின்றன. கொடுந்தமிழ் அல்லது வழக்குத்தமிழில் ஒவ்வொரு வட்டாரத்திற்கும் ஏற்ப ஒலிப்புமுறை வேறுபடுகிறது. தென்வட்டார வழக்குகளிலும் இலங்கை வழக்குகளிலும் இம்முறை பெரும்பாலும், ஆனால் முழுமையாக அல்லாமல், பின்பற்றப்படுகிறது. வடபகுதி வட்டார வழக்குகளில் ஒலிப்பெயர்வு ஏற்பட்டு ஒலிப்புநெறிகளில் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. இவைதவிர,சமசுகிருதம் மற்றும் பிறவடமொழிகளிலிருந்து பெறப்பட்ட சொற்கள் தமிழில் பெரிதும் உள்ளபடியே பயன்படுத்தப்படுகின்றன.

தமிழ் எழுத்தில் ஏன் மிடற்றொலி மற்றும் பிறவொலி வேறுபாடுகள் இல்லையென்ற கேள்விக்குஒலிப்பியலாளர்கள் நடுவே ஒருமித்த கருத்து இல்லை. ஒரு சாரார் தமிழ் மொழியில் கூட்டுமெய்களும் மிடற்றினின்று ஒலிக்கும் வல்லெழுத்துகளோ அடிப்படையில் இருந்ததில்லையென்றும், சொற்புணர்ச்சி மற்றும் குறுக்கத்தினால் மட்டுமே இவ்வொலிகள் ஏற்படுகின்றன என்று குறிப்பிடுகின்றனர். அதனால்,இந்திய ஐரோப்பிய மொழிக்குடும்பத்தைச் சேர்ந்த மொழிகள் மற்றும் பிறதிராவிட மொழிகளைப் போலன்றி தமிழில் இவ்வொலிகளுக்கெனத் தனியெழுத்துகள் தேவைப்படவில்லை என்று கருதுகின்றனர். இக்கருத்திலிருந்து மாறுபட்டு மிடற்றொலிகள் அவற்றையொத்த பிற ஒலிகளின் வகையொலிகளாகவே தமிழில் இருந்துள்ளன என்றும் அதனாலேயே அவற்றிற்கெனத் தனியாக எழுத்துக்குறிகள் இல்லையெனவும் ஒரு கருத்தைச் சிலர் முன்வைக்கின்றனர்.

குறுக்கம்

குறுக்கம் என்பது சில ஒலிப்பியல் கூறுகள் சில குறிப்பிட்ட ஒலிகளையடுத்து வரும்பொழுது தத்தம் இயல்பான ஒலி அளவுகளிலிருந்து குறைந்து ஒலித்தலைக் குறிக்கும். அவை பின்வருவன.

  1. குற்றியலுகரம் – உயிர்
  2. குற்றியலிகரம் – உயிர்
  3. ஐகாரக் குறுக்கம் – கூட்டுயிர் (diphthong)
  4. ஔகாரக் குறுக்கம் – கூட்டுயிர்
  5. ஆய்தக் குறுக்கம் – சிறப்பெழுத்து (ஆய்தம்)
  6. மகரக் குறுக்கம் – மெய்ம்

எண்கள்

முதன்மைக் கட்டுரை:தமிழ் எண்கள்

தற்காலத்தில் தமிழில் பெரும்பாலும்அனைத்துலக எண் குறியீடுகளே பயன்பாட்டில் உள்ளனவாயினும் சில பத்தாண்டுகளுக்கு முன்வரை தனியான எண் குறியீடுகள் பயன்பட்டுவந்தன. ஒன்று தொடக்கம் ஒன்பது வரையான எண்களுக்கு மட்டுமன்றி, பத்து, நூறு, ஆயிரம் ஆகியவற்றுக்கும் தனிக் குறியீடுகள் இருந்தன. தமிழில் '0' என்று எண் வடிவம் இல்லை.

0123456789101001000

இலக்கணம்

முதன்மைக் கட்டுரை:தமிழ் இலக்கணம்

இலக்கண அடிப்படையில் தமிழ் ஒரு ஒட்டுநிலை மொழியாகும். தமிழில், பெயர் வகை, எண், வேற்றுமை, காலம், போன்றவற்றை விளக்கச் சொற்களுடன் பின்னொட்டுகள் சேர்க்கப்படுகின்றன. தமிழின் பொதுவான கருவி மொழியியல் (metalinguistic) சொற்களும் கலைச் சொற்களும் தமிழாகவே உள்ளன.

தமிழ் இலக்கணம் பெருவாரியாகத்தொல்காப்பியத்தில் விவரிக்கப்பட்டுள்ளது. தற்கால தமிழ் இலக்கணம் பெரும்பாலும்நன்னூலைத் தழுவியமைந்துள்ளது. பதிமூன்றாம் நூற்றாண்டில் எழுதப்பட்ட நன்னூலில் தொல்காப்பிய நெறிமுறைகள் தெளிவுபடுத்தப்பட்டுள்ளன.

தமிழ்ச் சொற்கள் வேர்ச் சொற்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றுக்கு ஒன்று அல்லது பல ஒட்டுகளைச் சேர்ப்பதன் மூலம் புதிய சொற்கள் உருவாக்கப்படுகின்றன. இம்மொழியில் பெரும்பாலான ஒட்டுகள் பின்னொட்டுகளாகும். பின்னொட்டுகள் சொற்களின் இலக்கண வகையில் மாற்றங்களை உண்டாக்குகின்றன அல்லது அவற்றில் பொருளை மாற்றுகின்றன. இவை சொற்களுக்கு இடம், எண், பால், காலம் போன்றவற்றை உணர்த்தும் பொருள்களையும் கொடுக்கின்றன. இவ்வாறு சொற்களுக்கு ஒட்டுகளைச் சேர்ப்பதில் எவ்வித எண்ணிக்கைக் கட்டுப்பாடும் கிடையாது. இதனால் தமிழில் பல ஒட்டுகளைக் கொண்ட நீளமான சொற்கள் இருப்பதைக் காணலாம்.

தமிழில் பெயர்ச் சொற்கள் இரண்டு திணைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. அவை உயர்திணை,அஃறிணை என்பவை. உயர்திணை கடவுளர், மனிதர் என்பவர்களைக் குறிக்கும் சொற்களை உள்ளடக்குகின்றன. ஏனைய உயிரினங்களையும் பொருட்களையும் குறிக்கும் சொற்கள் அஃறிணைக்குள் அடங்குகின்றன. உயர்திணை – ஆண்பால், பெண்பால், பலர்பாலென மூன்று பால்களாகவும், அஃறிணை – ஒன்றன்பால், பலவின் பாலென இரண்டு பால்களாகவும் வகுக்கப்பட்டுள்ளன. உயர்திணையுள் அடங்கும் ஆண்பால், பெண்பால் என்பன ஒருமைப் பொருளைச் சுட்டுகின்றன. பலர்பால் பன்மைப் பொருளைச் சுட்டுவது மட்டுமன்றி மதிப்புக் கொடுப்பதற்காக ஒருமையாகவும் பயன்படுவதுண்டு.

தமிழில்வேற்றுமைகள் எட்டுவகைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. இவை முதலாம் வேற்றுமை, இரண்டாம் வேற்றுமை, மூன்றாம் வேற்றுமை, நான்காம் வேற்றுமை, ஐந்தாம் வேற்றுமை, ஆறாம் வேற்றுமை, ஏழாம் வேற்றுமை, எட்டாம் வேற்றுமையெனப் பெயரிடப்பட்டு உள்ளன. இப்பகுப்பு சமசுகிருத இலக்கண அடிப்படையிலானது என்றும் இதனால் செயற்கையானது என்றும் தற்கால மொழியியலாளர் சிலர் கூறுகின்றனர்.

தமிழியல்

தமிழை உலக மொழிகளில் ஒன்றாகக் கொண்டுமொழியியல் கண் கொண்டு நோக்குவது தமிழியல். தமிழின் இயல்பினைத்தொல்காப்பியம் நமக்குப் புலப்படுத்துகிறது. அஃது இன்றைய மொழியியலாளரின் எண்ண ஓட்டத்தைப் பெருமளவில் ஒத்துள்ளது.

சொல் வளம்

பார்க்கவும்:விக்சனரியில் உள்ளதமிழ்ச் சொற்களின் பட்டியல் மற்றும்தமிழ் மொழியிலிருந்து உருவான சொற்களின் பட்டியல்

தமிழ், சொல்வளம் நிறைந்த மொழி. நவீனத் தமிழ்மொழி பழந்தமிழ் மொழியில் பயன்படுத்தப்பட்ட பெரும்பாலான சொற்களை இன்னும் பயன்படுத்துகின்றது. இதனால் சற்று பயிற்சியுடன் பழந்தமிழ் இலக்கியங்களை ஒரு தமிழர் படித்து அறிய முடியும்.திருக்குறள் போன்ற சிறந்த பழந்தமிழ் படைப்புகள் தமிழர்களால் சிறப்பாகக் கற்கப்படுவதற்கு இத்தொடர்ச்சியான சொற்பயன்பாடு உதவுகின்றது.

பிறமொழிச் சொற்கள் மட்டுப்படுத்தப்பட்டு இருப்பது தமிழ் மொழியின் தொடர்ச்சிக்கும் தனித்துவத்திற்கும் அவசியம், ஆகையால் தமிழ் அடிச்சொற்களிலிருந்து உருவாக்கப்படும் சொற்களைப் பயன்படுத்துவதே நன்று என்பது பல தமிழ் ஆர்வலர்களின் கருத்து ஆகும்.

கலைச்சொற்கள்

தமிழ் மொழியில் அறிவியலைப் படைக்கக் கலைச்சொல்லாக்கம் இன்றியமையாததாகும். இது தமிழ் மொழியில் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்படும் ஒரு செயல்பாடுதான். இக்காலத்தில் தமிழக இலங்கை அரசுகளின் பல்கலைக் கழகங்கள் ஊடாகவும் தமிழ்த் தன்னார்வலர்களாலும் இப்பணி தொடர்கின்றது. தமிழ் மாணவர்களுக்கு பயன்படும் வகையில் தமிழ் நாடு அரசு செந்தமிழ் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்ட இயக்ககத்தின் மூலம் தமிழ்க் கலைச்சொல்அகரமுதலி நூலை வெளியிட்டுள்ளது.

தமிழ் மொழி ஆய்வு மற்றும் வளர்ச்சி அமைப்புகள்

தமிழ் மொழி ஆய்வுக்கும் வளர்ச்சிக்கும் இந்திய அரசும், தமிழ்நாடு அரசும் சில அமைப்புகளை நிறுவிச் செயல்படுத்தி வருகின்றன. அரசு அமைப்பு தவிர சில தனியார் அமைப்புகளும் செயல்பட்டு வருகின்றன.

இந்திய அரசு அமைப்பு

தமிழ்நாடு அரசு அமைப்புகள்

தனி அமைப்புகள்

தமிழ்ப் பற்று

தமிழ்ப் பற்று என்பது ஒருவருக்குதமிழ் மொழி,இலக்கியம்,பண்பாடு,நாகரிகம் போன்றவற்றோடு இருக்கும் ஒரு பற்று ஆகும்.நாட்டுப் பற்று, சமயப் பற்றுப் போன்று இது ஓர் உணர்வு, அரசியல், கொள்கை கலந்த ஒரு நிலைப்பாடு ஆகும். தமிழ்ப் பற்று தமிழ் அடையாளத்தினது, தமிழர் அரசியலின் ஒரு முக்கிய அடையாளமாகவும் உள்ளது.

"உடல் மண்ணுக்கு, உயிர் தமிழுக்கு" போன்ற முழக்கங்கள் ஊடாகவும் கவிதைகள் ஊடாகவும் செயற்பாடுகள் ஊடாகவும் இயக்கங்கள் ஊடாகவும் தமிழ்ப் பற்று வெளிப்படுப்படுத்தப்படுகிறது.

மேலும் காண்க

உசாத்துணை

  1. "மொழியின்றி மனிதரில்லை".
  2. "Myanmar's Tamils seek to protect their identity". BBC. http://www.bbc.com/news/world-asia-25438275. பார்த்த நாள்: 11 April 2014. 
  3. "உலகில் பேசப்படும் மொழிகளில் தமிழ் மொழி 15வது இடம்".
  4. "தமிழ் உலக மொழி ஆகுமா".
  5. Nationalencyklopedin, "Världens 100 största språk 2007" The World's 100 Largest Languages in 2007
  6. தமிழ்reference atஎத்னொலோக் (16th ed., 2009)
  7. "Official languages of Tamil Nadu",Tamil Nadu Government, archived fromthe original on 21 அக்டோபர் 2012, retrieved1 May 2007
  8. "Official languages",UNESCO, retrieved10 May 2007
  9. "Official languages of Srilanka",State department, US, retrieved1 May 2007
  10. "Official languages and national language",Constitution of the Republic of Singapore, Government of Singapore, archived fromthe original on 24 செப்டம்பர் 2015, retrieved22 April 2008{{citation}}:Check date values in:|archive-date= (help)
  11. Hammarström, Harald; Forkel, Robert; Haspelmath, Martin, eds. (2017)."தற்காலத் தமிழ்".Glottolog 3.0. Jena, Germany: Max Planck Institute for the Science of Human History.
  12. Hammarström, Harald; Forkel, Robert; Haspelmath, Martin, eds. (2017)."பழந்தமிழ்".Glottolog 3.0. Jena, Germany: Max Planck Institute for the Science of Human History.
  13. எத்னோலாக்கின் 1997 ம் ஆண்டு அறிக்கைhttp://www.ethnologue.com/show_language.asp?code=tam
  14. "Summary by language size".
  15. senthil, Varavanai (2 May 2017)."இணையத்தில் அதிகம் பயன்படும் மொழி 'தமிழ்'..! - கூகுள் சர்வே முடிவு".
  16. தொல்காப்பியம் கிறித்துவுக்கு முன் 300 ஆண்டுகளுக்கு முன் எழுதப்பட்டது என்பதிலிருந்து இந்தக் கூற்றை நிறுவலாம்.
  17. கமில் சுவெலபில், languages." Britannica Concise Encyclopedia. 2007. Encyclopædia Britannica Online. 7 Sept. 2007"("Relative stability of root vowels seems to have been the rule" "A tendency toward structural and systemic balance and stability is characteristic of the Dravidian group")[1]
  18. ஐராவதம் மகாதேவன். (2003).Early Tamil Epigraphy from the Earliest Times to the Sixth Century A.D. கேம்பிறிஜ்: ஹார்வேர்ட் பல்கலைக்கழக பதிப்பகம்.
  19. "Students get glimpse of heritage". The Archaeological Survey of India. 22 நவம்பர் 2005 இம் மூலத்தில் இருந்து 2014-06-18 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20140618165752/http://www.hindu.com/2005/11/22/stories/2005112215970400.htm. பார்த்த நாள்: 29 மே 2012. 
  20. அகழ்வாராய்ச்சி பற்றிஇந்து நாளிதழின் பெப்ரவரி 02, 2005 செய்திக்குறிப்பு: "`Rudimentary Tamil-Brahmi script' unearthed at Adichanallur"[2]பரணிடப்பட்டது 2005-02-17 at theவந்தவழி இயந்திரம்
  21. "தமிழ் மொழிக் குடும்பம்".
  22. Southworth, Franklin C. (1998), "On the Origin of the word tamiz",International Journal of Dravidial Linguistics,27 (1):129–132
  23. Zvelebil, Kamil V. (1992),Companion Studies to the history of Tamil literature, Leiden: E.J. Brill at pp. x-xvi.
  24. "பர்க்லேயிலுள்ள கலிபோர்னியாப் பல்கலைக் கழகத்தின் தமிழ்த்துறைத் தலைவரான ஜார்ஜ் எல் ஹார்ட் 2004 ஆண்டில் வெளியிட்ட அறிக்கை". Retrieved2021-08-27.(ஆங்கில மொழியில்)
  25. http://presidentofindia.nic.in/scripts/eventslatest1.jsp?id=587
  26. http://news.bbc.co.uk/2/hi/south_asia/3667032.stm
  27. "செம்மொழி கனவு மெய்ப்படல்" (PDF). செம்மொழி (செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம்) (2): 6. 2008. https://www.cict.in/pdf/Tamil-News-Letter-2.pdf. பார்த்த நாள்: 09 அக்டோபர் 2021. 
  28. "தமிழ் செம்மொழியாக அங்கீகரிக்கப்பட்டது". Retrieved 12-10-2021.{{cite web}}:Check date values in:|accessdate= (help)
  29. மட்டக்களப்பு மாநாட்டு நினைவு மலர், 1996{{citation}}:|first= missing|last= (help)

பழங்காலக் குறிப்புகள்

  • பவணந்தி முனிவர்,நன்னூல் மூலமும் விருத்தியுரையும், (ஏ. தாமோதரன் ed., 1999),உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை.
  • பவணந்தி முனிவர்,நன்னூல் மூலமும் கூழாங்கைத்தம்பிரான் உரையும் (ஏ. தாமோதரன் ed., 1980). Wiesbaden, Franz Steiner Verlag.
  • தண்டியாசிரியர்,தண்டியாசிரியர் இயற்றிய தண்டியலங்காரம்: சுப்பிரமணிய தேசிகர் உரையுடன். (கு. முத்துராசன் ed., 1994). தர்மபுரி, வசந்த செல்வி பதிப்பகம்.
  • தொல்காப்பியர்,தொல்காப்பியம் இளம்பூரணர் உரையுடன் (1967 மறு அச்சு). சென்னை, TTSS.

தற்காலக் குறிப்புகள்

  • காங்கேயர். (1840).உரிச்சொல் நிகண்டுரை. புதுவை: குவேரன்மா அச்சுக்கூடம்.
  • ஐராவதம் மகாதேவன். (2003).Early Tamil Epigraphy from the Earliest Times to the Sixth Century A.D. கேம்பிறிஜ்: ஹார்வேர்ட் பல்கலைக்கழக பதிப்பகம்.
  • ரி. நடராசன். (1977).The language of Sangam literature and Tolkappiyam. மதுரை: Madurai Publishing House.
  • ஜி. யு. போப். (1862).First catechism of Tamil grammar: Ilakkana vinavitai – mutarputtakam. மதுரை: Public Instruction Press.
  • ஜி. யு. போப். (1868).A Tamil hand-book, or, Full introduction to the common dialect of that language. (3rd ed.). சென்னை: Higginbotham & Co.
  • வி. எஸ். இராசம். (1992).A Reference Grammar of Classical Tamil Poetry. Philadelphia: The American Philosophical Society.
  • ஹரால்டு எஃப் ஷிஃப்மன். (1998). "Standardization or restandardization: The case for 'Standard' Spoken Tamil".Language in Society27, 359–385.[3]
  • ஹரால்டு எஃப் ஷிஃப்மன். (1999).A Reference Grammar of Spoken Tamil. கேம்பிறிஜ்: கேம்பிறிஜ் பல்கலைக்கழக பதிப்பகம்.[4]
  • ரோன் ஆசர் &இ. அண்ணாமலை. (2002).Colloquial Tamil: The Complete Course for Beginners. Routledge.

வெளி இணைப்புகள்

Search Wiktionary
விக்சனரியில்தமிழ் என்னும் சொல்லைப் பார்க்கவும்.
விக்கிநூல்களில் மேலதிக விவரங்களுள்ளன:தமிழ்
விக்கிமீடியா பொதுவகத்தில்,
தமிழ்
என்பதில் ஊடகங்கள் உள்ளன.


பொது

இணையவழித் தமிழ் கற்றல்

வரலாறு
பேச்சு வழக்குகள்
இந்திய வழக்குகள்
இலக்கியம்
உயர்தர இலக்கியம்
சமய இலக்கியம்
கவிதை
இலக்கணம், அகராதி
வரலாறு
ஏனைய மொழிகள்
எழுத்துக்கள்
இலக்கணம்
ஒலியியல்
எழுத்துப் பெயர்ப்பு
 • ஐஎஸ்ஓ 15919
தமிழ் கல்வெட்டுகள்
அலுவல் மொழிகள்
ஒன்றிய அரசின்
அலுவல் மொழிகள்
எட்டாவது அட்டவணையில்
உள்ள அலுவல் மொழிகள்
மாநில அரசின்
அலுவல் மொழிகள்
(எட்டாவது அட்டவணையில்
இல்லாதவை)
அலுவல்மொழியாக
அங்கீகரிக்கப்படாத
மொழிகள்
"https://ta.wikipedia.org/w/index.php?title=தமிழ்&oldid=4462572" இலிருந்து மீள்விக்கப்பட்டது
பகுப்புகள்:
மறைந்த பகுப்புகள்:

[8]ページ先頭

©2009-2026 Movatter.jp